செவ்வாய், பிப்ரவரி 21, 2012

ஜெனீவாவில் ஸ்ரீலங்கா: தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கும்?

சுதந்திரத்தின் பின்பு ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் சர்வதேச சமூகத்திற்கும் அதன் கருத்தியல்வடிவமான ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபைக்கும் புதிய விஷயம் அல்ல. ஸ்ரீலங்கா அரசின்மனித உரிமை மீறல்கள் தொடர்பான முதல் விவாதம் 1986 இல் ஐ. நா.சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் கூட்டத்தில் நடைபெற்றது. இதற்கான தீர்மானத்தை ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டுவந்த நாடு ஆர்ஜென்டீனா. தீர்மானத்தை கொண்டு வருவதில் பின்னணியில் தீவிரமாக இயங்கிய நாடான இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. அப்போதைய ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் நண்பர்களாகவிருந்த அமெரிக்காவும்,மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அவர்களுடைய சொல் கேட்ட பல ஆபிரிக்க நாடுகளும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. வன்னி இறுதி யுத்தத்தின் போது, சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகள் பற்றிய சட்ட விதிகளும், மானிட நலன் தொடர்பான சட்ட விதிகளும் மீறப்பட்டனவா என்ற உண்மையை கண்டறிவதற்கான பகிரங்க விசாரணை தேவை என 2009 இல் மனித உரிமை கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு பதிலாக பயங்கரவாதத்தை தோற்கடித்ததற்காக ஸ்ரீலங்காவை பாராட்டும் தீர்மானம் உறுப்பு நாடுகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சீனா,ரஷ்யாவுடன்,இந்தியாவும் முழுமனதுடன் பாடுபட்டது. இத்தீர்மானம் நிறைவேறுவதற்கு மனித உரிமை கவுன்சிலுக்கு ஸ்ரீலங்கா அளித்த வாக்குறுதிகள் முதன்மையான காரணமாக அமைந்தன. முப்பது வருடங்களுக்கு மேலாக அனுபவித்த பயங்கரவாதத்தின் கொடுமையை இப்போதுதான் முடிவுக்கு கொண்டு வந்ததாயும் உண்மையான ஜனநாயகமும், சுபீட்சமான பொருளாதாரமும் கட்டியெழுப்பப் படுவதற்கான கால அவகாசத்தை ஸ்ரீலங்காவுக்கு வழங்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா கோரியது சரியென ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஃபெப்ரவரி 27,2012 இல் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைக்கவுன்சிலின் 19வது அமர்வில்,சம்பவங்களுக்கான விளக்கம் அல்லது பதில் கூறும் தன்மை (accountability),விசாரணைகளில் நம்பகமான வெளிப்படைத்தன்மை  (transparency) என்பவற்றுடன் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை(reconciliation)மேற்கொள்வதற்காக ஸ்ரீலங்கா அரசானது மேலும் பலன் தரக்கூடிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம்கொண்டுவரப்படும் எனவும் அத்தகைய ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அதற்கு தாம் ஆதரவளிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தீர்மானத்தை அமெரிக்கா தானாகவே பிரேரிக்குமா அல்லது கனடா,மற்றும் ஐரோப்பிய நேசநாடுகளினூடாகபிரேரிக்குமா என்பது ஸ்ரீலங்கா எதிர்நோக்கும் தற்போதைய பெரும் புதிராகும். போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பெருமளவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்ற எண்ணப்பாடு ஸ்ரீலங்காவில் இருப்பதாக தெரிவிக்கப் படுகிறது. தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகளுக்கான போராட்டத்தை பெருமளவிலான பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதத்தின் மத்தியில் முறியடித்தமைக்கு பொறுப்பான மனிதர்கள் தண்டிக்கப்படுவது ஒரு அவசியமான நியாயம் என அவர்கள் கருதுகிறார்கள். இத்தகைய விசாரணையொன்றை வலியுறுத்தி அவர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரமும் எஞ்சியுள்ள பயங்கரவாததின் சதிவேலையாக பிரச்சாரம் செய்து சர்வதேச ரீதியான விவகாரம் ஒன்றை உள்ளூர் அரசியலாக மாற்றுவதில் ஸ்ரீலங்கா முனைப்பாக உள்ளதையும் அறியமுடிகிறது. போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் போர்நிகழ்த்தப்பட வேண்டிய முறை பற்றி ஆலோசனை வடிவிலும், ஆயுதமற்றும் ராஜதந்திர உதவிகளை வழங்குவதற்கான முன் நிபந்தனைகளின் வடிவிலும் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் போர்க்களத்தில் முற்று முழுதாகப் புறந்தள்ளப்பட்டதனமூலம் பெறப்பட்ட வெற்றியின் களிப்பில்,உரிமைகள் பற்றி வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் யாவும் காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையை ஒரு நல்ல முன்னுதாரணமாக மற்றைய நாடுகளும் பின்பற்ற முனைந்தால் ஏற்படக்கூடிய சர்வதேச ஒழுங்கு முறையொன்றின் சீரழிவை மேற்கு நாடுகள் அனுமதிக்க தயாராக இல்லை என்ற நிலையே அந்நாடுகள் இத்தகைய தீர்மானமொன்றை வலியுறுத்துவதற்கான காரணம் எனவும்சொல்லப்படுகிறது. ஸ்ரீலங்கா அரசு வெளிநாட்டு தலையீடுகளை தவிர்ப்பதற்காக தானேநியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் குறைந்தபட்ச சிபாரிசுக்களைக் கூட நிறைவேற்றுவதில் ஆர்வம் காண்பிக்காததை பலர் சுட்டிக்காட்டுகிறார்கள். ஸ்ரீலங்கா அரசு சர்வதேச அரங்குகளில் வெளிப்படுத்தும் காலம் கடத்தும் தன்மையை இனியும் பொறுமையுடன் சகித்துக் கொள்ள அவர்கள் தயாராக இல்லை. ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளடங்கியுள்ள அமைப்புக்களில் ஒன்றான மனித உரிமைகள் கவுன்சில் ஒரு வருடத்தில் இருஅமர்வுகளை மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கொள்கிறது. மார்சில் நடைபெறும் அமர்வு ஜெனீவாவிலும்,ஜுலை அமர்வு நியூயோர்க்கிலும் ஒவ்வொரு வருடமும் நடைபெறும். ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதாக கிடைக்கும்குற்றச்சாட்டுக்களை விசேட குழுவொன்றின் மூலம் விசாரித்து பின்னர் உறுப்பு நாடுகளின் தீர்மானத்திற்கு அந்த அறிக்கை சமர்ப்பிக்கப் படுகிறது. உறுப்பு நாடுகள் குறிப்பிட்ட ஒரு நாட்டில் ந டைபெறும் மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட வேண்டும்என ஏற்றுக்கொண்டால்,அத்தீர்மானம் ஐ. நா. பொதுச்சபையின் விவாததிற்கு சமர்பிக்கப்படும். பொதுச்சபையில் அநேகமாக உலகில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து நாடுகளும் அங்கத்தவர்களாக உள்ளன. பொதுச்சபையும் விவாதத்தின் முடிவில் அத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டால் அத்தீர்மானம ஐ. நா. வின் பாதுகாப்பு சபை என்ற அமைப்பின் விவாதத்திற்கு விடப்படும். இம்மூன்றுஅமைப்புக்களிலும் பாதுகாப்பு சபையே தனது தீர்மானங்களை செயலுருவமாக்கக் கூடிய அதிகாரத்தை கொண்டது. பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானமே சர்வதேச குற்ற நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட முடியும். மனித உரிமை கவுன்சில் அல்லது ஐ.நா.பொதுச்சபை ஒரு நாட்டின் நடவடிக்கைகள் பற்றிய அபிப்பிராயங்களை தெரிவிக்கும்அமைப்புக்களே தவிரஒரு நாட்டின் நடவடிக்கைகளின் மீது எவ்வித கட்டுப்பாடுகளையும் பிரயோகிக்கும் சட்ட ஆளுமையற்றவை என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டும். இஸ்ரேல் மீது பாதுகாப்பு சபைநிறைவேற்றிய தீர்மானங்கள் பலவற்றின் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கப்பட்டாமல் அவை கிடப்பிலேலேயே கிடக்கின்றன. அதேபோல்,சிரியாவில் நடைபெறும் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என மனித உரிமை கவுன்சிலும், பொதுச்சபையும் நிறைவேற்றிய தீர்மானம் பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட முடியாமல் சீனாவும்,ரஷ்யாவும் தமது வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுத்தன. மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அடுத்த நாளே ஸ்ரீலங்கா அரசையும்,மஹிந்த ராஜபக்‌ஷவையும் குர்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடப் போவதில்லை. இத்தீர்மானம் நாட்டின் ஆட்சியாளரை சர்வதேச அரங்குகளில் வெட்கித் தலைகுனிய வைப்பதற்கான ஒரு கருவியாக அமையலாம். அதையும் விட உலக வங்கி,சர்வதேச நாணய நிதியம்,ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற கடன் வழங்கும் அமைப்புக்களிலிருந்து கடன்களைப் பெற்றுக் கொள்வது சிரமமான காரியமாக அமையலாம். தனிப்பட்ட நாடுகளும் கூட தமது பொருளாதார உதவிகளை நிறுத்திக் கொள்ளலாம். தன்னார்வ அமைப்புக்கள் ஸ்ரீலங்காவை பகிஷ்கரிக்குமாறு பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம். ஸ்ரீலங்காவிற்கு உல்லாசப் பயணம் செல்ல வேண்டாம் எனவும் ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி பொருட்களை கடைகளில் வாங்க வேண்டாம் எனவும் அவை மக்களை கேட்டு பிரச்சாரம் செய்யலாம். மிக அண்மைக்காலம் வரை பர்மா மீது இத்தகைய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அதிகாரத்தின் பெயரால் ஒரு உயிர் பறிக்கப்பட்டதற்கும், ஒரு நபர் காணாமல் போனதற்கும் காரணமாயமைந்தது எது அல்லது யார் என்ற வினாவிற்கு விடைசொல்ல வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. இறுதி யுத்ததின் முடிவில், தமது பிள்ளைகள் அல்லது உறவினர் இராணுவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டதை நேரில் கண்டவர்கள் இன்றுவரை அவர்கள் ஏன் திரும்பி வரவில்லை என்ற கேள்விக்கு விடைதேடி காத்திருக்கிறார்கள்.அதேபோல்,ஒயாத அலைகளின் போது கைதிகளாகப் பிடிக்கபட்ட இராணுவ உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உண்டு. பிரிவும்,உயிரிழப்பும் தருகின்ற துயரத்திலிருந்து மீண்டெழுந்து,தமது வாழ்க்கையை முன்னோக்கி சீரமைத்துக் கொள்வதற்கான மனரீதியான மற்றும் பொருளியல்ரீதியான உதவிகளைவழங்குவது அரசாங்கத்தின் முக்கியமான கடமை. அதற்கும் ஒருபடி மேலே சென்று இனங்களுக்கிடையேயான சுமுக உறவையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசின் மிக முக்கிய பொறுப்பு. நாட்டு மக்கள் அனைவரினதும் சுமுகமான எதிர்காலத்தை மனதில் கொண்டு,ஐ.நா. தீர்மானம் தரக்கூடிய அழுத்தங்கள் எதிநோக்கப்பட வேண்டும். ஏற்கனவே கற்றுக்கொண்ட அனுபவப் பாடங்கள்,இத்தகைய பெருந்துயர் கொண்ட பேரழிவு மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கும், சமூகங்களுக்கிடையேயான நட்பும் புரிந்துணர்வும் வளர்வதற்கான காரணியாகவும் அமைய வேண்டும். தீர்மானத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளைவிட மக்களின் எதிர்காலம் குறித்த அக்கறை முன்னிறுத்தப்பட வேண்டும். மனித உரிமை கவுன்சிலில் ஸ்ரீலங்கா மீதான தீர்மானம் ஒரு வேண்டுகோளாகத்தான் வெளிப்படுத்தப்படுகிறது. அத்தீர்மானம் நிறைவேற்றப் பட்டால் புலம் பெயர்ந்த தமிழர்கள் அதை தமது மாபெரும் வெற்றியாக கொண்டாடுவதன் மூலம் நாட்டிலுள்ள தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடமைகள் மீதான பாதுகாப்பு மேலும் குறைவடையச் செயவதோ அல்லது தோற்கடிக்கப்பட்டால், அந்த வெற்றி தரக்கூடிய மமதையில் ஸ்ரீலங்கா அரசு நாட்டிலுள்ள சிறுபானமை இனங்களின் நியாயமான உரிமைகளை வழங்க மறுப்பதோ தவிர்க்கப்பட வேண்டும். வெற்றியடைந்தாலும், தோல்வியடைந்தாலும் தீர்மானம் இலங்கைத்தீவின் அனைத்து மக்களுக்கும் நன்மையளிக்கக் கூடியதாக அமைய வேண்டும்.

3 கருத்துகள்:

Sakthivel சொன்னது…

Unarchiku aatpadamal
Nadunilaiyodu aaraindhu ezhudhi
ullirgal.

Vaazhthukkal.

Aanal
enadhu abiprayam Thanadhu kora alagal palluyirai kothi thindra Raajali Paravai
Thandikkapada vendum. Illaiyel Adhan vettai Thodarum.

gnanasuthan சொன்னது…

வெட்கித் தலைகுனிய வைக்கலாம்? சாதாரணமாக வெட்கி தலைகுனிவதை காண்பது கேட்பது எல்லாம் அரிதாகிவிட்ட காலத்தில் , இலங்கையாவது வெட்கிரதாவது தலைகுனிவதாவது!

உலகின் மகா ஜனநாயக நாடுகள் (தாதாக்கள்) பண்ணும் அடாவடிகளை பார்க்கும் போது மக்கள்தான் வெட்கித்தலையைக்கொண்டுபோய் எங்கேயாவது வைக்கணும். இதில் இலங்கை ஒரு பொறுக்கி. போக்கிரி.

gnanasuthan சொன்னது…

வெட்கித் தலைகுனிய வைக்கலாம்? சாதாரணமாக வெட்கி தலைகுனிவதை காண்பது கேட்பது எல்லாம் அரிதாகிவிட்ட காலத்தில் , இலங்கையாவது வெட்கிரதாவது தலைகுனிவதாவது!

உலகின் மகா ஜனநாயக நாடுகள் (தாதாக்கள்) பண்ணும் அடாவடிகளை பார்க்கும் போது மக்கள்தான் வெட்கித்தலையைக்கொண்டுபோய் எங்கேயாவது வைக்கணும். இதில் இலங்கை ஒரு பொறுக்கி. போக்கிரி.