புதன், நவம்பர் 16, 2011

மயூரன் சுகுமாரனும் மரண தண்டனையும்


பொது மன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில், எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில், பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடை செய்யப்பட்ட கடற்கரையொன்றில், மயூரன் சுகுமாரன், அண்ட்றூ சான் ஆகிய இருவரும் இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டு, தனித்தனி கம்பங்களுடன் சேர்த்து கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் (Paramilitary Police) 10 மீற்றர் தூரத்தில் வைத்து தமது துப்பாக்கிகளை இயக்குவதன் வைப்பதன் மூலம்,இருவருக்கும் மரண தண்டனையை நிறைவேற்றுவர்.

பாலியில் கைது
2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்தொனேசியாவின் பாலித் தீவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஹெரோயின் எனப்படும் போதைப் பொருளை கடத்த முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 9 பேரில், (பின்னர் ஒட்டுமொத்தமாக பாலி 9 என அழைக்கப் பட்டார்கள்) இவ்விருவரும் முக்கியமானவர்களாக கருதப்பட்டு இருவருக்கும் இந்தொனேசிய நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது. ஆறு வருடங்களாக இந்தொனேசிய உயர் நீதிமன்றம் வரை சென்று போராடியும், இந்தொனேசிய ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப் பட்ட கருணை மனுவுக்கும் பலன் கிடைக்காத நிலையில், இவர்கள் இருவரும் பாலித்தீவின் மிக மோசமான சிறையொன்றில் மரண தண்டனையின் மூலம் தமது உயிர்கள் பறிக்கப்படுவதற்காக காத்திருக்கிறார்கள்.

மயூரன் மகிழ்ச்சியான பொழுதுகளில்  












இளமையின் சவால்
மயூரன் இலங்கை தமிழ் பெற்றோரான சுகுமாரன் - ராஜினி தம்பதிகளுக்கு மூத்த குழந்தையாக 1981 இல் இங்கிலாந்தில் பிறந்தார். 1984 இல் பெற்றோருடன் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அங்கேயே கல்வி கற்று வளர்ந்தவர். குங்-பூ போன்ற கொரிய தற்காப்பு கலையில் வல்லவரான மயூரன், சிட்னி நகரில் இளைஞர்களுக்கு அதை பயிற்சி அளித்தும் வந்தார். தவறான போதனைகளும். இளம் வயதிற்குரிய சவாலை எதிர் கொள்ளும் மனப்பாங்கும் தான் மயூரனையும் அவரது ஏனைய நண்பர்களையும் இவ்வாறானதொரு சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுபட வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. மயூரனது குடும்ப பின்னணியோ அல்லது வளர்ப்பு முறையோ அவரை இத்தகைய செயலில் ஈடுபடுத்தியிருக்க முடியாது. அவர் மீது இதுவரை அவுஸ்திரேலியாவில் ஒரு சிறிய குற்றம் கூடப் பதிவாகி இருக்கவில்லை. இன்று மரண தண்டனைக்கு காத்திருக்கும் மயூரன் பாலித் தீவில் கைது செய்யப்படும் போது அவருக்கு வயது 24 மட்டுமே.

அவுஸ்திரேலியாவின் கொள்கை
1973 இலிருந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் முறை அவுஸ்திரேலியாவின் சட்டப் புத்தகத்தில் இருந்து முற்றாக நீக்கப்பட்டது. அத்துடன் மரண தண்டனைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை சர்வதேச மன்றங்களில் அவுஸ்திரேலியா தொடர்ந்து வலியுறுத்தியும் வந்துள்ளது. மரன தண்டனையை சர்வதேச ரீதியாக இல்லாதொழிப்பதை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் 1990 இல் ஏற்றுக் கொண்ட அவுஸ்திரேலியா, அத்தீர்மானத்தில் கையொப்பமிட்ட அனைத்து உறுப்பு நாடுகளும் தமது நீதி பரிபாலன முறையிலிருந்து மரண தண்டனையை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திவந்துள்ளது.
1990 களில் போதைப் பொருட்களுடன் மலேசியாவில் கைது செய்யப்பட்ட இரு அவுஸ்திரேலியர்களுக்கு மலேசிய நீதிமன்றம் விதித்த மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு அளிக்கும்படி, அந்நாளில் பிரதமராயிருந்த பாப் ஹாக் (Bob Hawke) மலேசிய அரசாங்கத்தை மிக உருக்கமாக வேண்டினார். அவருடைய வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டு, பின்பு அவர்கள் தூக்கிலிடப்பட்ட செயலை “காட்டுமிராண்டித்தனம்” என அவர் வர்ணித்து மலேசியரின் கோபத்துக்கு ஆளானார்.

2005 இல், சிங்கப்பூரில் போதைபொருட்களுடன் கைது செய்யப் பட்ட வான் ருவோங் ங்குயென் ( Van Tuong Nguyen ) என்ற அவுஸ்திரேலியருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை  விதித்தது. அவரை மன்னிக்குபடி அவுஸ்திரேலிய பாராளுமன்றம் நிறைவேற்றிய வேண்டுகோள் தீர்மானத்தையும் புறக்கணித்து சிங்கப்பூர் அரசாங்கம் அவரை தூக்கிலிட்டது. அப்போதைய அவுஸ்திரேலிய பிரதமராயிருந்த ஜோன் ஹவர்ட் (John Howard) ஐந்து தடவைக்கு மேலாக சிங்கப்பூர் பிரதமருக்கு தனிப்பட்ட முறையிலான மன்னிப்பு வேண்டுகோளை விடுத்திருந்தார். இந்த பின்னணியிலேதான் மயூரன் சுகுமாரன் உட்பட்ட 9 அவுஸ்திரேலிய பிரஜைகள் போதை பொருட்களை கடத்த முயன்ற குற்றச் சாட்டில் பாலியில் கைது செய்யப்பட்டனர். இந்தொனேசிய பொலிசாருக்கு அவுஸ்திரேலிய மத்திய பொலிசார் (Australian Federal Police)  கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது மேற்கொள்ளப்பட்டது. சிங்கப்பூரில் தமது பிரஜையை மன்னிக்கும்படி வேண்டுகோள் விடுத்த அதே வேளையில், இந்தொனேசியாவில் மரண தண்டனைக்கு உள்ளாவார்கள் எனத் தெரிந்திருந்தும் அவுஸ்திரேலிய அரசு தனது குடிமக்களை ஒரு வெளிநாட்டு அரசாங்கத்திடம் காட்டிக் கொடுத்தது.
தாயார் ராஜினியும் தங்கை பிருந்தாவும்
மயூரனின் தங்கையான பிருந்தா சுகுமாரன் அவுஸ்திரேலிய வானொலிக்கு அளித்த பேட்டியில், “இதனால் இவர்கள் எதை சாதித்து விட்டார்கள்? அவர்களுடைய குற்றத்தை ஏன் அவுஸ்திரேலியாவில் விசாரித்து தண்டனை வழங்கியிருக்கக் கூடாது? தமது குடிமக்கள் தூக்கிலிடப் படுவார்கள் எனத் தெரிந்திருந்தும்கூட ஏன் இவ்வாறு நடந்து கொண்டார்கள்?” என் வினவினார்.

போதைப் பொருட்கள்
1970 களில் வியட்நாமிய யுத்தம் முடிவுக்கு வரும் வேளைகளில், பல ஆசிய நாடுகளுக்கூடாக போதைப் பொருள் கடத்தப்படுவது அதிகரித்தது. இதனைக் கட்டுபடுத்தும் நோக்குடன் மலேசியா, தாய்லாந்து, இந்தொனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் போதைப்பொருள் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனையை 1975 இல் அறிவித்தன. இத்தண்டனை முறை உடனடியாகவே மத்திய கிழக்கு நாடுகளுக்கும், பின்னர் வட ஆபிரிக்க நாடுகளுக்கும் (ஐரோப்பாவுக்கு மிக அண்மையில் இருப்பதால்) பரவியது. எனினும் இன்றைய நிலையில் இருபத்தைந்துக்கு மேற்பட்ட ஆசிய நாடுகள் மரண தண்டனையை தமது சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றி விட்டன. பிலிப்பீன்ஸ் மிக அண்மையாக – ஜூன் 2006 இல்- மரண தண்டனையை இல்லாதொழித்ததால், 1200 வரையான மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த கைதிகள் உயிர் தப்பினார்கள். உலகிலேயே இன்று அதிகமான மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாடுகளாக சீனா, ஈரான், அமெரிக்கா, வியட்நாம், சூடான் என்பன விளங்குகின்றன. உலகின் ஏனைய நாடுகளில் தூக்கிலிடப் படுவோரின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமானோர் சீனாவில் மட்டும் தூக்கிலிடப் படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  போதைப் பொருட்கள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதாக கருதப்படும்  லத்தின் அமெரிக்காவின் பல நாடுகள் இன்று மரண தண்டனையை முற்றாக ஒழித்து விட்டன.

சர்வதேச நிலைப்பாடு
மார்ச் 2007 இல் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சங்கத்தின் (UN Human Rights Council) மூன்று வார மாநாட்டில், வன்முறை சம்பந்தப்படாத குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது கண்டிப்பாக தவிர்க்கப் படவேண்டும் என்ற வாதத்தை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் வலியுறுத்தி பிலிப் ஆல்ஸ்ரன் (Philip Alston) முன் வைத்தார். நியூயார்க் பல்கலைக் கழகத்தில் சட்டப் பேராசிரியராக இருந்த ஆல்ஸ்ரன், நீதிக்கு புறம்பான, மற்றும் விசாரணையின்றி மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான மரணதண்டனைகளை கண்டறிவதற்கான ஐ.நா.சபையின் விசேட தூதுவராகவும் பணியாற்றினார். ( UN Special Rapporteur on Extrajudicial, Summary or Arbitrary Executions). போதைப் பொருள் கடத்தல் போன்ற பொருளாதார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதை எதிர்த்து வாதிடுவதற்கான நல்ல சந்தர்ப்பம் அம்மாநாட்டில் அவுஸ்திரேலியாவுக்கு கிடைத்திருந்தும் கூட, ஐ.நா.வுக்கான அவுஸ்திரேலிய பிரதிநிதி மரண தண்டனைக்கான தமது எதிர்ப்பை தெரிவிப்பதிலிருந்து விலகியே இருந்தார் என்றார் அவர். அதே காலப்பகுதியில் பதினொரு அவுஸ்திரேலிய பிரஜைகள் மரண தண்டனையை எதிர்நோக்கி வெளிநாட்டு சிறைகளில் காத்திருந்தனர்.

மரண தண்டனை நீதியானதா?
மரண தண்டனை என்ற பெயரில், ஒரு மனிதனின் உயிரை அரசு பறிப்பதற்கான அதிகாரம் மிகவும் கொடூரமானது என சமூக ஆர்வலர்களும் சிந்தனையாளர்களும் பல ஆண்டுகளாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒரு மனிதன் தவறிழைப்பதற்காகவே பிறப்பதில்லை எனவும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவன் தவறிழைத்து விட்டால், அத்தவறை நினைத்து வருந்தி அவன் திருந்தி வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை சமூகம் அவனுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வாதிடுகிறார்கள். “காட்டுமிராண்டித் தனமான ஒரு குற்றச்செயலை செய்த ஒருவரை தூக்கில் போடுவதன் மூலம், நாமும் பழிக்குப் பழி என்னும் காட்டுமிராண்டித் தனமான நிலக்கு தாழ்ந்து விடுகிறோம்” என்கிறார் அவுஸ்திரேலிய அரசியல்வாதியான ஆண்ட்றூ பாட்லெட். (Andrew Bartlett). அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவர், மனநிலை பிறழ்ந்தோர், நீதிமன்றத்தில் தம்மை சரியான முறையில் காப்பாற்றிக் கொள்ள பண வசதியற்ற ஏழைகள் என்போரே அதிகளவில் தூக்கு தண்டனைக்கு உள்ளாகிறார்கள். ஈரானில் பராயமடையாத சிறுவர், சிறுமியரும் மரண தண்டனை விதிக்கப்பட்டு கல்லெறிந்து கொலை செய்யபடுகிறார்கள். அண்மையில் 16 வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளம் பெண், கற்பு நெறிக்கான ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்கத் தவறியதால் கல்லெறிந்து கொல்லப்படும் மரண தண்டனைக்குள்ளானாள். 


இங்கிலாந்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு,1953இல் பெருந்தொகையான மக்களது எதிர்ப்பின் மத்தியில் டெரெக் பெண்ட்லி (Derek Bentley) தூக்கில் தொங்க விடப்பட்டபோது அவருக்கு 19 வயது. அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தவறானது என்றும் ஆனால், குற்றச் செயலில் அவர் பங்கெடுத்தமைக்காக அவருக்கு பகுதி மன்னிப்பு (இறந்த பின்பு) வழங்குவதாயும்1993 இல் (சரியாக 40 வருடங்களின் பின்) அப்போதைய உள்துறை அமைச்சர் அறிவித்தார். 1998இல் அப்பீல் நீதிமன்றம் பெண்ட்லி குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கி அவர் மீதிருந்த களங்கத்தை நீக்கியது. தவறான நீதி வழங்கலால் பறிக்கப்பட்ட ஒரு உயிரை மீண்டும் கொண்டுவர முடியுமா? பிரிட்டனின் முன்னாள் உள்துறை அமைச்சரான மைக்கல் ஹவர்ட் (Michael Howard) பின்வருமாறு கூறுகிறார்: “நீதி விசாரணையென்பது தவறுகளின்றி, முற்று முழுதாக சரியானது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது. அத்தகைய விசாரணையின் அடிப்படையில், அரசு ஒரு மனிதனின் உயிரை பறிப்பதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை”. ஹவர்ட் ஒரு தலை சிறந்த சட்ட வல்லுனரும் கூட. மரண தண்டனைக் கைதியாக இருந்த வால்மீகி முனிவர் மன்னிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னரே இராமயணத்தை எழுதினார் எனவும், அவர் தூக்கில் தொங்க விடப்பட்டிருந்தால் இன்றுவரை இறை வணக்கத்திற்குரியவராக உள்ள இராமபிரானின் கதை எமக்கு தெரிய வந்திருக்க முடியுமா என வினவுவோர் உண்டு. ஒரு மனிதன் செய்த தவறுக்காக அவனை அழித்துவிடுவதன் மூலம், அவனிடமிருக்கக் கூடிய அனைத்து ஆளுமைகளையும் அழித்துவிடுவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது அவர்களுடைய வாதம். காலத்திற்கொவ்வாத, மனிதத்தன்மை சிறிதுமற்ற இத்தகைய தண்டனை முறையை வரலாற்றின் குப்பை தொட்டிக்குள் வீசியெறிய வேண்டும் என லண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகை தனது ஆசிரிய தலையங்கத்தில் வலியுறுத்தி இருந்தது.

முன்னுதாரணம்

ஓவியம் தீட்டும் மயூரன்
மயூரன் சிறைக்குள்ளே ஒரு முன்னுதாரணமான மனிதராக விளங்குகிறார் எனவும், அவர் செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டார் என தாம் முழு மனதுடன்
நம்புவதாகவும், அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் எனவும் பாலியின் கெரபொக்கான் சிறைச்சாலையின் பிரதம பொறுப்பதிகாரி இந்தொனேசிய உயர் நீதிமன்றத்தில் வேண்டினார். ஆறு வருடங்களாக மிக மோசமான சுகாதார நிலைமைகள் உள்ளதாக கருதப்படும் பாலி சிறையில் அடைபட்டுள்ள மயூரன், சிறைச்சாலைக்குள் ஒரு குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். கைதிகளின் நலன்களை கவனிப்பது, சிறு திருத்த வேலைகளை கவனிப்பது என்பவற்றுடன், சக கைதிகளுக்கு ஓவியம் வரையக் கற்றுக் கொடுப்பதுடன் தானும் ஓவியம் தீட்டுகிறார். பாலியின் தலைநகரத்தில் ஒரு ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்து சிறைக்குள் வரையப்பட்ட ஓவியங்களை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தில், போதைப் பொருள் பாவனையிலிருந்து மீள விரும்புவர்களுக்கான உதவி நிலையம் ஒன்றை பாலியில் இயங்கச் செய்கிறார்வாழ்க்கையின் நோக்கங்கள் எவை என்று புரிந்து கொள்ளாமல் வாழ்ந்தமைக்காக நான் கவலைப் படுகிறேன்; சிறை எனக்கு பல பாடங்களை கற்றுத் தந்து விட்டது, என்கிறார் மயூரன். எனது தவறுக்காக நான் இந்தோனேசிய மக்களிடமும் அவுஸ்திரேலிய மக்களிடமும் மன்னிப்பு கோருகிறேன்”. 

“அவரை தூக்கிலிடுவதன் மூலம் அவர் மட்டும் இறக்கப் போவதில்லை” என்கிறார் மயூரனின் தங்கை பிருந்தா சுகுமாரன். “அப்பா, அம்மா, நான், தம்பி மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் ஒரு நிரந்தரமான இழப்புடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். அந்த இழப்பிலிருந்து எங்களால் என்றும் மீள முடியாது”. 
  
“எனது மகனுக்கு திருந்தி வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். அவன் செய்த தவறுக்காக அவனை மன்னித்து இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்” என்று மன்றாட்டமாக வேண்டுகிறார் மயூரனின் அம்மா ராஜினி.

Myuran Sukumaran from Mercy Campaign on Vimeo.

(இருபது வருடங்களுக்கு முன்னதாகவே தூக்கு தண்டனைக்கு எதிரான கருத்தை என்னுள் விதைத்த ஆசானும், நண்பருமான தோழர் எஸ். வி. ராஜதுரை அவர்களின் நினைவுகளுக்கு ....)

(இக்கட்டுரையின் ஆக்கத்தில் உரிய ஆலோசனை தந்து பங்கெடுத்த எனது விரிவுரையாளர் திரு. மு. நித்தியானந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி).








2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Scott Rush மரண தண்டனையில் இருந்து விலக்களிக்கப் பட்டதற்கு அவரின் தோல் நிறம்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

gnanasuthan சொன்னது…

மயூரன் மேல் மிகுந்த பரிவையும், வாசிப்பவர்களை இதை நிறுத்த எதையாவது செய்யவேண்டும் என்ற உணர்வையும் இக்கட்டுரை ஏற்படுத்துகின்றது. பத்துமுறை தூக்கில் போடப்படவேண்டியவர்கள் ( ஒரு பேச்சுக்கு) எத்தனையோ மக்கள் தினமும் இறந்துகொண்டிருப்பதற்க்கு காரணமாக இருந்தவர்கள் இருப்பவர்களெல்லாம் ஹாயாக வாழ்கின்றார்கள். செய்தது தவறுதான் என மன்னிப்பு கேட்பவனை கொல்லவேண்டும் என்று நிக்கிறாங்கள் என்ன உலகமடா இது.