செவ்வாய், ஜூலை 06, 2010

தமிழ் மக்களின் கூட்டுத் தற்கொலை..


ஒரு மக்கள் கூட்டம் தமது சமூகத்திற்கேற்பட்ட அவலம் காரணமாக ஒரே சமயத்தில் அனைவரும் கூட்டமாகத் தற்கொலை செய்து கொண்டதை பஞ்சாபிய மக்களின் வீரம் செறிந்த வரலாற்றில் படித்திருக்கிறேன். ஆனால் தமது அறியாமை காரணமாக தமக்குத் தாமே மெதுவாக நஞ்சூட்டி, தம்மைத் தாமே அழித்துக் கொல்லும் ஒரு தற்கொலை செயல்முறையை இலங்கையிலுள்ள (தமிழ்)மக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதை எத்தனை பேரால் உணர்ந்து கொள்ள முடியும்?
சிட்னியில் சமூக அக்கறை மிகுந்த எனது நண்பியொருவருடன் பேசிக்கொண்டிருந்த போது, வெளிநாடுகளில் இருந்து செல்லும் பணம் எவ்வாறு விவசாய முயற்சிகளைப் பாழாக்கி விட்டிருக்கிறது என்ற பேச்சு எழுந்தது. .நண்பி வன்னியில் இருந்து திருமணம் மூலம் சிட்னியில் நிரந்தரப் பிரஜையானவர். அவர் விவசாயம் பற்றி என்னை விட அதிக அறிவு கொண்டவர் என்ற நம்பிக்கையுடன் அவரிடம் கேட்டேன்:

” இப்போது ஊரில் யாரும் விவசாயம் செய்வதில்லையாமே?’

அத்ற்கு அவர் சொன்ன பதில்:

“ மக்களுக்கு உரம் எதுவும் கிடைப்பதிலையாம்..இந்த நிலையில் எப்படி விவசாயம் செய்வது..?”

மக்கள் விவசாயத்தில் ஈடுபடமுடியாமைக்கு வேறு பல காரணங்கள் இருந்திருக்கலாம். போர், அதன் காரணமான இடப் பெயர்வு, எதிர் காலத்தின் மீதான நம்பிக்கையின்மை போன்று பல காரணங்கள் தமிழ் மக்களை விவசாயத்தில் இருந்து வெளியேற்றியிருக்கலாம்.. ஆனால், எனக்கு சற்று மன அதிர்ச்சியைத் தந்த விஷயம், (இரசாயன) உரம் இல்லாவிட்டால் விவசாயமே செய்ய முடியாது என்பது தான்.
தற்போது தமிழ் பிரதேசங்களில் உள்ள விவசாயம் பற்றி எனது நண்பர் இலங்கையில் இருந்து பின்வருமாறு தெரிவித்தார்:

“வாழைப் பழத்தின் அளவைப் பெருக்க வைப்பதற்கு வாழைக் குலையின் பொத்தியை யூரியா உரம் நிரப்பிய பையால் மூடிக் கட்டுகிறார்கள். எனவே இங்கே சிறிய வாழைப் பழத்தை யாரும் சந்தையில் காணமுடியாது.. அது மட்டுமல்ல, வாழைக்காய் எத்தனை மணி நேரத்தில் பழமாக வேண்டும் என்பதற்கு ஏற்ப அதற்குத் தகுந்தாற்போல் அடிப்பதற்கு இங்கே மருந்துகள் நிறைய உண்டு..அவை ஸ்ப்றே வடிவத்தில் இருப்பதால் பாவிப்பதில் ஒரு கஷ்டமும் இல்லை..”

இன்னொரு நண்பருடன் பேசியபோது, அவர் தமிழ் மக்களிடையே பரவலாகக் காணப்படும் நோய்கள் பற்றிச் சொன்னார்..

“ எமது சிறு பிராயத்தில் கான்சர் என்பது மிக அரிதான நோய்.. யாராவது அந்த நோயால் இறந்தால், நாம் அதிகமாக இரக்கப் படுவோம்... இப்போது அப்படியில்லை.. கான்சர் மக்களிடையே பரவலாக காணப்படுகிறது.. யாராவது கான்சரால் செத்தால் அது அதிசயமான விஷயமாக இப்போது கருதப்படுவதில்லை...”

எனது சிறு வயதில்,னது சூழலில் இருந்த விவசாயிகள் மாட்டுச் சாணி போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்துவதை கண்டிருக்கிறேன். மேலும், மண்னுக்கு உரம் சேர்ப்பதற்காக சில வகையான பயிர்களைப் பயிரிட்டு பின் அவற்றைப் பிடுங்கி அந்த மண்ணிலேயே புதைத்து உரமாக மாற்றுவதைப் பார்த்திருக்கிறேன்.. அந்த அறிவைப் பெற அப்போது பல்கலைக் கழகங்களோ, விவசாய பீடங்களோ இருக்கவில்லை. இருபத்தைந்து தொடக்கம் முப்பது வருடஙளுக்குள் எமது விவசாய முறைகள் முற்றாக மாற்றமடைந்து நாம், உண்ணும் காய்கறிகள் பழங்கள் அனைத்திலும் இரசாயன உரம் நீக்கமற நிறைந்திருப்பதை எம்மால் உணர முடிகிறது.. இந்த நிலை ஏன்? நாம் அருந்தும் உணவும், குடிக்கும் தண்ணீரும் நாம் பாவித்த இரசாயன உரங்களால் நஞ்சாகிப் போனதால் தானே எமது குழந்தைகளும், மக்களும் தீர்க்க முடியாத நோய்களைத் தீர்ப்பதற்காக ஒவ்வொரு மருத்துவருக்கும் பணத்தை வாரியிறைக்கிறார்கள்? இதை எப்போது நமது மக்கள் உணர்ந்து கொள்வார்கள்? எமது விவசாய நிலங்களும் குடிதண்ணீரும் நாம் தொடர்ந்து அளவுக்கு மீறி பயன் படுத்தும் இரசாயன உரங்களால் நச்சுத்தன்மை அடைவதை நாம் எப்போது தடுத்து நிறுத்தப் போகிறோம்?

அரசாங்கத்தின் தொடர்ச்சியான விவசாயக் கொள்கை உள்ளூர் விவசாயிகளுக்கு எதிரானது. இலங்கை மக்கள் உட்கொள்ளும் உணவின் 50% பங்கு தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுவதாக விவசாய அமைச்சர் தெரிவிக்கிறார்.. தமது குடும்பம் நெற்பயிர் செய்த நிலங்கள் யாவும் வருடக் கணக்கில் காடு மண்டிக் கிடப்பதாக எனது சிங்கள நண்பியொருவர் சொன்னார். அது மட்டுமன்றி தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பாவனையில் இருந்த நீர்ப்பாசன கால்வாய்கள் யாவும் உரிய கவனிப்பில்லமையால் பாழடைந்து விட்டதாகவும் அவர் சொன்னார். தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் சுதேசிய விவசாயிகளை ஆதரிக்கவில்லை. ஆனால், ”நீங்கள் இறந்தாலும் பரவாயில்லை, எமக்கு வேண்டியது உங்கள் பணம் தான்” என்ற ரீதியில் வெளிநாட்டு இரசாயன மருந்துக் கம்பனிகள் இலாபம் தேடுவதற்கு ஏற்ற முறையில் அரசாங்கம் தனது கொள்கைகளை வகுக்கிறது.இந்தக் கொள்கை வெற்றியடைய தமிழ் விவசாயிகளூம், தமிழ் மக்களும் ஆதரவு வழங்குகிறார்கள்.
 தமக்கு ஏற்படும் தீங்கு பற்றிய அறியாமையால் கண்மூடித்தனமாக உரங்களைப் பயன் படுத்தி தம்மைத் தாமே கொலை செய்து கொள்கிறார்கள்.
இவ் விஷயம் தொடர்பாக, நிலம் மற்றும் விவசாய சீர்திருத்ததிற்கான அமைப்பின் இணையத் தளத்தில் திரு. சரத் ஃபெர்னாண்டோ எழுதிய கட்டுரையின் தொடுப்பை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன். http://www.monlar.net/2010/07/peoples-commission-on-food-nutrition.html

பிற்சேர்க்கை (25.12.2010)

இக்கட்டுரையுடன் தொடர்புடையதாக  காலச்சுவடு இதழில் சங்கீதா ஸ்ரீராம் எழுதிய அருமையான கட்டுரை ஒன்றைப் படிக்குமாறு அன்பர்களை வேண்டிக் கொள்கிறேன். எமது  தட்டில் வந்தடையும் உணவு எதிர் நோக்கும் அபாயத்தை சிறப்பான முறையில் விவரித்திருக்கிறார்.

http://www.kalachuvadu.com/issue-131/page60.asp






வெள்ளி, மார்ச் 05, 2010

சேருமிடம் சுனாமி (Destination Tsunami): ஒரு உல்லாசப் பயணத்தின் கதை!

New photography exhibition by Tourism Concern



சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை தமிழ் நாட்டினதும், கேரளத்தினதும் தென்பகுதிக் கரையோரங்களிலும், இலங்கையின் கிழக்கு மற்றும் தெற்கு கரையோரங்களிலும் ஒரே இரவில் ஏற்படுத்திய உயிரழிவும் அனர்த்தங்களும் யாவரும் அறிந்ததே. சுனாமிக்குப் பின்னர் அப்பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் குறித்து டூரிஸம் கென்சேர்ண்(Tourism Concern) எனும் அமைப்பு அண்மையில் லண்டன் மெற்றோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில்   (London Metropolitan University) ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இக்க்கருத்தரங்கில் விசேட பேச்சாளராக கேரளாவில் இருந்து சஜீர் ரஹ்மான் பங்கு பற்றியிருந்தார். சஜீர் கபனி (மாற்று வழி) எனப்படும் சமூக நல செயற்பாட்டு அமைப்பின் பொறுப்பாளர். முப்பது வயசுக்குள் தான் இருக்கும் எனும்படியான தோற்றம். பிசிறில்லாத தெளிவான ஆங்கிலத்தில் தான் சொல்ல வந்த விடயத்தை அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வித்தில் எடுத்துரைத்தார். கேரளத்தின் தென்பகுதிக் கடற்கரையோரங்களில் பல நூற்றண்டுகளாக வாழ்ந்து வரும், மீன் பிடித்தலை வாழ்வாதாரமாகக் கொண்ட குடும்பங்கள் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அகற்றப்பட்டு அவர்களது குடிசைகள் இருந்த இடங்கள் எவ்வாறு உல்லாசப் பயணிகள் தங்குவதற்கான விடுதிகளாகவும், ஹோட்டல்களாகவும் மாற்றப்படுகின்றன என்பதை விபரித்தார். பல்கலைக்கழக மாணவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாடாளர்கள் நிறைந்திருந்த கருத்தரங்கில் சஜீர் தமது அமைப்பின் பணிகளை தெளிவாக விளக்கினார். தமது அமைப்பினால் கவனமெடுக்கப்படும் பிரதேசங்களில் உள்ள மக்கள் கடல் சார்ந்து வாழ்பவர்கள் எனவும் அவர்களது மூதாதையர் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த இடங்களிலிருந்து அவர்கள் அகற்றப் படுவதாகவும் பெரும் வணிக நிறுவனங்கள் கேரள அரசின் சுற்றுலாப் பயணத்துறையின் ஆசீர்வாதத்துடன் எவ்வாறு அந்த நிலங்களை அபகரிக்கின்றன என்பதையும் விபரித்தார். தனது அமைப்பின் செயற்பாடுகள் பற்றி எவ்விதமான மாயப் பிம்பங்களையும் ஏற்படுத்த அவர் முயலவில்லை. இந்த சுமூகங்களின் மக்களது மனநிலையில் சுனாமி ஏற்படுத்திய அவலமான தாக்கத்தை பெரும் வணிகம் எவ்வாறு தனது இலாப நோக்கத்திற்கு பயன்படுத்த முயல்கிறது என்பதையும் இம்மக்கள் மத்தியில் பணியாற்றும் சில தொண்டு நிறுவனங்கள் தூர நோக்கின்றி எவ்வாறு உடனடிப் பொருள் ஆதாயத்தினை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றன என்பதையும் விபரித்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களது நிவாரணத்திற்காக மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதி எவ்வாறு கேரள அரசின் சுற்றுலாத்துறையினால் உல்லாசப் பயண மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதையும் விபரித்தார். கடல் சார்ந்து வாழும் மக்களை கடற்கரைகளிலிருந்து அகற்றும் பிரதான நோக்குடன் அவர்களுக்கு தூர இடங்களில் தொடர் மாடி வீடுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது தொழில் நிமித்தம் கடலுக்குச் செல்வதற்கு வருமானத்தின் ஒரு பகுதியை பிரயாணச் செலவுக்காக இழக்க வேண்டியிருப்பதாகவும் கூறினார். அதைவிடவும் கடுமையானது என்னவெனில் உல்லாச விடுதிகள் அமைக்கப் பட்டுள்ள கரையோரங்களில் அவர்களது படகுகளை நிறுத்துவதற்கான அனுமதி மறுக்கப்படுவதும், விடுதிகள் அமைக்கப் பட்டுள்ள கரையோரங்களில் அவர்கள் நடமாடுவதற்கு (கடற்கரையில் நடந்து செல்வதற்குக் கூட) தடை விதிக்கப் பட்டுள்ள நிலையும் எனக் கூறினார். தமது அமைப்பு உல்லாசப் பயணத்துறைக்கு எதிரானதல்ல என்றும் உல்லாசப் பயணம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்களை அபகரிப்பதன் மூலம் அவர்களது வாழ்க்கையை பாதிப்பதையும் இலகுவில் மாறுபடக் கூடிய கரையோர சுற்றுச்சூழல் (coastal ecology) மாசடைவதையும் தடுப்பதே தமது அமைப்பின் நோக்கம் எனவும் தெரிவித்தார். கரையோரங்களுக்கு வரும் உல்லாசப் பயணிகளால் கரையோரங்களில் வாழும் சமூகங்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். கபனி அமைப்பின் பணிகள் தொடர்பான ஒரு புகைப்படக் கண்காட்சி லண்டன் கார்டியன் கேலரியில்(The Guardian Gallery, King’s Place, 90 York Way, London N1 9GU மார்ச் 31 வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. டூரிஸம் கென்சேர்ண் அமைப்பு இக் கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளது.

கபனியின் பணிகள் டூரிஸம் கென்சேர்ண் அமைப்பின் ஒத்துழைப்புடன் கடந்த மூன்று வருடஙளாக நடைபெற்று வருவதாக அதன் அமைப்பாளாரான தான்யா கூப்பர் (Tanya Cooper) தெரிவித்தார். ஸ்ரீ லங்காவில் தாம் மேற்கொண்ட இத்தகைய பணியை தாம் முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாக அவர் சொன்னார். அதற்கான காரணத்தை வினவியபோது, பாதுகாப்பு என்ற பெயரில் தமது பணியாளர்களின் நடமாட்டம் பெரிதும் கட்டுப்படுத்தப் பட்டதால் சுனாமியால் பாதிக்கப் பட்ட கிழக்குப் பிரதேசங்களில் தமது பணியைத் தொடர முடியாமல் இருந்ததை குறிப்பிட்டார். எனினும் அறுகம் பே பகுதியில் ஒரு ஹெலிபாட் (helipad) அமைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியை உள்ளூர் மக்களும் சிறு வர்த்தகர்களும் சேர்ந்து எதிர்த்ததன் மூலம் முறியடித்ததை மக்கள் போராட்டத்தின் சிறந்த உதாரணமாக தான் கருதுவதாக தெரிவித்தார். தமது பணி ஸ்ரீலங்காவில் முடிவுக்கு வந்துவிட்டாலும் அந்நாட்டு மக்களது மனித உரிமைகள் தொடர்பாக தமது அமைப்பு ஒரு அறிக்கையை தயாரித்திருப்பதாகவும் தெரிவித்தார். போர் முடிவுக்கு வந்த பின்னர் கிழக்கினதும் வடக்கினதும் கடற்கரைகள் பெரு நிறுவனங்களுக்கு விலை போவது பற்றி தமது அமைப்பு அக்கறை கொள்வதாகவும் தெரிவித்தார்.  http://www.tourismconcern.org.uk/index.php?page=destination-tsunami