புதன், ஜனவரி 07, 2009

ஸ்ரீலங்கா: மாற்றமடையும் அரசின் தோற்றம்

ஜயதேவ உயங்கொட

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தம் பல பொது விவாதங்களையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்துள்ளது. விடுதலைப் புலிகளைப் போரில் “தோற்கடிப்பதற்கான” காலஎல்லை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாகத் தள்ளிப்போடப்படுகின்ற செயலானது, யுத்ததின் தன்மை பற்றி ராஐபக்ஷ அரசாங்கம் கொண்டுள்ள புரிந்துணர்வின் மீது கடுமையான சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. போரினால் ஏற்படும் மனித அவலங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கடைப்பிடிக்கப்படும் தொலைநோக்கற்ற மனப்பான்மையும் அவை பற்றிய அக்கறையை வெளிப்படுத்தும் சர்வதேச செயற்பாட்டாளர்கள் மீதான பகையுணர்வும் சர்வதேச அளவில் அரசாங்கத்தை ஓரளவுக்கேனும் தனிமைப்படுத்தியுள்ளன. ஆங்கிலம் பேசும் அரசாங்கத்தின் பேச்சாளர்கள் (அவர்கள் அனைவரும் தாடி வைத்துள்ள மனிதர்கள்!) சர்வதேச மற்றும் பிராந்திய அதிகார மையங்களை தமது சொற்திறமையால் வென்றெடுக்க முடியும் என நம்புகிறார்கள் போல் உள்ளது. யுத்தத்தினுள் அகப்பட்டு அவதியுறும் அப்பாவித் தமிழ் மக்களின் அவலநிலை, தமிழ்நாட்டில் பெரும் அரசியல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அங்குள்ள அரசியல் கட்சிகள் நீண்டகாலமாக மறந்திருந்த ஒரு யதார்த்தத்தை தற்போது உணர்ந்து விழித்துக்கொண்டுள்ளன. இந்தியாவின் மத்திய அரசாங்கம் இலங்கைத் தீவின் தமிழ் மக்களைப் படிப்படியாக அழித்தொழிக்க முனையும் ஒரு யுத்த அமைப்புக்கு ஆதரவையும் உதவியையும் தொடர்ந்து வழங்கி வருகின்றது என்பதே அந்த யதார்த்தம்.

சர்ச்சைக்குரிய அறிவிப்பு

ஸ்ரீலங்காவின் ராணுவத் தளபதி கனடாவில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்றுக்கு தமது இதயத்தை திறந்து கொட்டியுள்ளதன் மூலம் ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார். அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ள ஒரு முக்கியமான விடயம், இலங்கைத்தீவு பெரும்பான்மையின மக்களாகிய சிங்களவருக்கே சொந்தமானதென்றும் அங்கு வாழும் சிறுபான்மையினர் “நியாயமற்ற” கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது என்பதாகும். பேட்டி ஏற்படுத்திய பகிரங்க விவாதத்தில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்படவேண்டியவை.

முதலாவது,ஒரு நாட்டின் இராணுவத் தளபதி அரசியல் உள்ளடக்கம் கொண்ட அறிக்கைகளை வெளியிடுவது சரியானதா? வழமையாக பொது மக்களைச் சார்ந்துள்ள அரசியல்வாதிகளாலேயே இத்தகைய அறிக்கைகள் வெளியிடப்படும். இரண்டாவது இராணுவத் தளபதியின் பேட்டியில் உள்ள அரசியல் ரீதியான உண்மைக்குப் புறம்பான தன்மை.

இலங்கைத் தீவு பல மொழி பேசும்,பல மதங்களைப் பின்பற்றும்,பல இன மக்களைக் கொண்டது என்ற உண்மையை மறுத்துரைக்கும் விதமாக அவருடைய பேட்டி அமைந்துள்ளது. தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகள் உட்பட,பொதுமக்கள் சார்ந்த செயற்பாட்டாளர்கள் பலரும் இக்கருத்து மீதான தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுடைய கருத்தின்படி சிங்களத் தேசிய வாதத்தின் தீவிரவாதிகளே இலங்கைத்தீவு சிங்களவருக்கு மட்டுமே “சொந்தமானது” என்று கருதுபவர்கள். ஒரு நாட்டின் இராணுவத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ள ஒருவர் இத்தகையதொரு கடும் கண்டனத்துக்குரிய அறிக்கையை எவ்வாறு வெளியிட முடியும்? அதுவும் இனங்களுக்கிடையே உக்கிரமானதொரு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில்?

இந்தச் சர்ச்சையை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். இராணுவத் தளபதியின் கூற்றானது அது எவ்வளவுதான் கண்டனத்துக்குரியதாகவும் அரசியல் ரீதியாகத் தவறானதாகவும் இருந்தபோதிலும், இலங்கையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் யுத்தம் தொடர்பான அரசியலின் சில இயங்குமுறைகளை அது வெளிப்படுத்துகிறது. அவற்றில் இரண்டை உடனடியாக அவதானிக்கலாம். முதலாவது அரசியல் சார்ந்த முக்கியமான அறிவிப்புக்களை இராணுவத் தளபதி வெளியிடுவது அவர் தாம் இராணுவத்தைச் சேர்ந்தவர் என்பதை மறந்ததினால் அல்ல: மாறாக தாம் இராணுவத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் இதனைச் செய்கிறார். பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்த தொழில் வேறுபாட்டின் சமநிலையானது நாட்டில் இப்போது மாற்றப்பட்டுவிட்டது என்பதை அவர் தெரிந்துகொண்டு விட்டார். தற்போதைய போரில் இராணுவம் பெரும் பங்கை ஆற்றும் நிலைமைகளின் காரணமாக இச்சமநிலை மாற்றமடைந்துள்ளது. இரண்டாவது இயங்குமுறை என்னவெனில்,சிறீலங்கா அரசு பெரும்பான்மை இனத்தினரால் கட்டுப்படுத்தப்படுவதுடன் இனரீதியாக ஒருபக்கச் சார்பானதுமாகும். தற்போதைய யுத்தத்தின் காரணமாக இத்தகைய கருத்து நிலைப்பாடுகள் மிகப் பலமானதாக வெளிப்படுகின்றன.

இராணுவ மேலாதிக்கம்

மக்களாட்சிக்குக் கட்டுப்பட்ட இராணுவத்தைக் கொண்ட ஒரு முன்னுதாரணமான மூன்றாம் உலக ஜனநாயக நாடாக ஸ்ரீலங்கா இனிமேலும் இல்லை என்ற நிலை தற்போது ஏற்பட்டுவிட்டது என்பதைக் கவனித்தால், இராணுவத் தளபதியின் அரசியல் சார்ந்த அறிக்கைகளை நாம் புரிந்து கொள்ளலாம். இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக நடைபெற்றுவரும் உள்நாட்டு யுத்தம் பழைய சமன்பாட்டை இராணுவம் உட்பட்ட பாதுகாப்பு அமைப்புக்களுக்குச் சார்பானதாக மாற்றிவிட்டது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பதவிக்காலத்திலேயே இம்மாற்றத்திற்கான செயல்முறை ஆரம்பித்தது எனலாம். விடுதலைப்புலிகளுடனான போர் தொடர்பான அரசியல் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தக்குடிய அதிகாரம் கொண்டதாக இராணுவம் தன்னை மாற்றிக்கொள்வதற்கான இடப்பரப்பை அவர் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த மாற்றத்திற்கு உதாரணமாக தனது அரசாங்கத்தில் உதவிப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்த நபரை- முன்னாளில் இராணவத்தினருக்கான தன்னார்வ உதவி அமைப்பில் கேணலாக இருந்தவரை- தனது மாமனார் என்ற ஒரே காரணத்தால் முழுநேர இராணுவத்தின் சீருடையை அணிய
அனுமதித்ததுடன் சிறிது காலத்தின் பின் அவரை ஜெனரல் பதவிக்கும் உயர்த்தினார். தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சியின்கீழ் நிலைமை கொஞ்சம் மேலே போய்விட்டது.

முன்னாளில் இராணுவத்தில் கேணலாக பதவி வகித்த தனது தம்பியை அரசின் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமித்துள்ளார் மகிந்த ராசபக்ஷ. இலங்கையில் யுத்தம் நடத்தப்படும் முறையானது இவ்வாறு தொடரும் ஒரு குடும்ப விவகாரமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

யுத்தத்தின் காரணமாக ஸ்ரீலங்கா அரசின் இயல்புநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அரசியல் அவதானிகள் கவனிக்கத் தவறியிருக்க மாட்டார்கள். இம்மாற்றத்தின் தன்மை அண்மையிலேயே தெளிவாக வெளித்தெரியத் தொடங்கியுள்ளது. ஸ்ரீலங்கா தற்போது முற்றுமுழுதான “தேசியப் பாதுகாப்பு அரசாக” மாற்றப்பட்டள்ளது. தொடர்ச்சியாக நடைமுறையிலிருக்கும் அவசரகாலச் சட்ட விதிகளுக்கும், பயங்கரவாத ஒழிப்பு சட்டத்திற்கும் கீழ் அநேகமான அரசியல் உரிமைகளும் குடிமக்கள் உரிமைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. அவசரகாலச் சட்டம் நடைமுறையிலுள்ள (நிரந்தர) சட்டமாக மாற்றப்பட்டுவிட்டது. முன்னைய காலங்களைப் போலன்றி தற்போது பாதுகாப்பு அமைப்புக்களே யுத்தத்தின் சகல அம்சங்களையும் கட்டுப்படுத்துகின்றன.

யுத்தம் ஊடகங்களில் எவ்வாறு வெளிப்படுத்தப்பட வேண்டும், விமர்சகர்களால் எவ்வாறு விமர்சிக்கப்பட வேண்டும் போன்ற அம்சங்களைக்கூட பாதுகாப்பு அமைப்புக்களே தீர்மானிக்கின்றன. பாரதுரமான பின்விளைவுகள் ஏற்படக்கூடும் எனப் பயந்து பத்திரிகையாளர்களும் அரசியல் விமர்சகர்களும் மிகச்சிறிய விமர்சனத்தைக்கூட பாதுகாப்பு அமைப்புக்கள் மீது வைக்கத் தயங்குகிறார்கள். கடந்த காலங்களில் ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகளே ஊடகங்களை கட்டுப்படுத்தினார்கள், அரசியல் உரிமைகளை மட்டுப்படுத்தினார்கள். தற்போது இராணுவம் இத்தகைய விவகாரங்களில் ஒரு செயற்பாட்டாளரின் பாத்திரத்தை மேற்கொண்டுள்ளது. அதேவேளையில் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள் இராணுவம் தீர்மானிக்கும் விடயங்களையும், அது மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தும் கடமையையே செய்கிறார்கள். வேறு எந்த அரசு அமைப்பும் - நீதித்துறை உட்பட- பாதுகாப்பு அமைப்புக்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய நிலையில் இன்று இல்லை. பாதுகாப்பு அமைப்புக்கள் ஜனாதிபதியின் செயலகத்திற்கு சமமான அளவில் அரச நிர்வாகத்தில் புகுந்துள்ளன.

இது மிகவும் புதியதொரு வளர்ச்சிநிலை. ஸ்ரீலங்காவின் அமைச்சரவையானது மிக அவலட்சணமான முறையில் பருத்துள்ள தோற்றம் கொண்டுள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஸ்ரீலங்காவில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும்கூட,இந்த அமைச்சரவைக்கு உண்மையான அதிகாரம் எதுவும் கிடையாது. பாராளுமன்றமும் ஒரு அதிகார மையமாக அமைந்திருக்கும் நிலையை இழந்து நீண்ட காலமாகிவிட்டது. இப்போது ஸ்ரீலங்காவில் இரண்டு அதிகார மையங்களே உண்டு - ஒன்று ஜனாதிபதி, மற்றொன்று பாதுகாப்பு அமைப்பு. இவ்விரு மையங்களும் தமக்குள்ளே பரஸ்பரம் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளன. இந்தச் சமநிலையின் அடிப்படையில்தான் ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்பு அரசு தற்போது உருவாகியுள்ளது.

இனப் பெரும்பான்மை வாதம் (ethnic majoritarianism)

ஸ்ரீலங்கா அரசு எப்போதும் பெரும்பான்மை இனத்தவருக்குச் சார்பான மனோபாவமும் சிறுபான்மையின மக்கள் மீது பகைமை பாராட்டும் தன்மையும் கொண்டது. இதன் காரணமாகவே 1980 களின் தொடக்கத்தில் மிக மோசமான உள்நாட்டுப்போரை சிறீலங்கா அனுபவித்தது. அரசின் இயல்பான தன்மையை, பல இனங்களை உள்ளடக்கிய பன்முகத்தன்மை (pluralist) கொண்ட அரசாக சீரமைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல் செயல்முறை சமாந்தரமான முறையில் செயல்பட்டு வந்துள்ளது. ஆனால் ஸ்ரீலங்காவின் அரசியல்,ராணுவ, நிர்வாக மற்றும் மக்கள் தொடர்பு சாதன அமைப்புக்கள் இத்தகைய சீர்திருத்தச் செயல்முறையில் நம்பிக்கையற்ற முறையிலேயே தொடர்ந்து இயங்கி வந்துள்ளன. அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கான சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை உள்வாங்கி, தானாகவே தன்னைச் சீரமைத்துக் கொள்வதற்கான அரசின் செயல்முறை தொடர்ந்து தோல்வியிலேயே முடிந்தது ஒரு விபத்தான விடயமல்ல. 1987இல்
நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரேயொரு சீரமைப்பு முனைப்புக்கூட நாட்டுக்கு வெளியேயிருந்து தான் வரவேண்டியிருந்தது. பெரும்பான்மையினத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இனவாத அரசு இச்சீரமைப்பை சுயவிருப்புடன் ஏற்றுக்கொள்ள மறுத்ததால்,இந்தியா வலுக்கட்டாயமாக அதனை ஸ்ரீலங்கா மீது திணிக்க வேண்டியிருந்தது.

இதுவே இன்றுவரை தொடரும் ஸ்ரீலங்காவின் பிரச்சனை. (தமிழ்) புலிகள் மீதான (சிங்கள) சிங்கங்களின் நிச்சயமாக நிகழப்போகும் வெற்றியாகப் பிரச்சாரப்படுத்தப்படும் இப்போரானது, “இந்த நாடு சிங்களவராகிய எமக்கே சொந்தம்” என்ற சிங்கள மக்களின் ஆதாரமற்ற மேலெழுந்தவாரியான நம்பிக்கைக்கு புத்துயிர் கொடுத்துள்ளது.

இனங்களுக்கிடையே ஏற்படும் போர் எப்போதும் இனப்பகைமையால் ஏற்படும் போராகவே நடைபெறுகிறது. அரசியல்ரீதியான தீர்வொன்றை ஏற்படுத்துவதை கைவிட்டு இராணுவத் தீர்வினைத் திணிக்க அரசியல் தலைமை முனையும்போது பொதுமேடைகளில் அரசியல்வாதிகள் வெளிப்படுத்த தயங்குவதை பகிரங்கமாக வெளியே சொல்வதற்கு இராணுவத்தினாலேயே முடியும்:

“இந்த நாடு பெரும்பான்மை மக்களாகிய எமக்கு, சிங்களவருக்குச் சொந்தமானது. சிறுபான்மையின மக்கள் சிறுபான்மையினராக நடந்துகொள்ள வேண்டும்.”

இதேவேளை, இனப் பெரும்பான்மை வாதம் பற்றிய நல்ல படிப்பினை ஒன்றை நான் அண்மையில் கற்றுக்கொண்டேன். இனப் பெரும்பான்மை வாதமானது பெரும்பான்மை இனத்தின் அரசியல்வாதிகளால்,சிறுபான்மை இனங்கள் மீது பலாத்காரமான வழிமுறைகளால் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் அரசியல்நிலைதான் என நீண்டகாலமாக நம்பியிருந்தேன். சிறுபான்மை இன மக்கள், இனப்பெரும்பான்மை வாதத்தை எப்போதும் ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், அதனை எதிர்க்கவும் முயற்சிக்கிறார்கள். இதன் காரணமாகவே இனரீதியான முரண்பாடுகள் யுத்தமாக வெடிக்கின்றன. ஸ்ரீலங்காவின் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் எவ்வாறு தமது இனங்களின் இரண்டாந்தர குடிநிலையையும், சமமற்ற அரசியல் நிலையையும் பேருவகையடன் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டன என்பதை அவதானித்தபோது எனது முடிவை மாற்றிக்கொண்டேன். இனப் பெரும்பான்மைவாதம் சிறுபான்மை மக்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்பதை இப்போது அறிந்துகொண்டுவிட்டேன்.

சிறுபான்மையின மக்களுடைய அல்லது குறைந்த பட்சம் அவர்களுடைய அரசியல் தலைவர்களுடைய உடன்படுதல் என்ற பலமிக்க ஒரு குணாம்சத்தை இனப் பெரும்பான்மை வாதம் பெற்றுக்கொண்டுள்ளது. தமக்குள்ளே போட்டியிட்டு, ஒருவரையொருவர் முந்திக்கொண்டு சமமின்மையை நிபந்தனை எதுவுமின்றி அவர்கள் மகிழ்வுடன் ஒப்புக்கொள்ளும்போது இனப்பெரும்பான்மைவாதம் பூரணமடைகிறது. “எமது சமூகத்திற்கான அபிவிருத்தி உதவி” போன்ற அலங்காரமான வார்த்தைகளால் மூடிமறைக்கப்படும் உபகாரங்களைப் பெறுவதற்காக அவர்கள் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள். இருபத்தைந்து வருடங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் சிறுபான்மை மக்களது உரிமைகளைப் பெற்றெடுப்பதற்கான பெருமுயற்சிக்கு ஏற்படுத்திய தாக்கங்கள் இவைதான்.

- கலாநிதி ஜயதேவ உயங்கொட
கொழும்பு பல்கலைக்கழகத்தில் அரசியல்துறை பேராசிரியர்.
Economic & Political Weekly October 25,2008 இதழில் இக்கட்டுரை வெளிவந்தது.

தமிழில் மொழிபெயர்த்தவர் ஜெயன் மகாதேவன்.

2 கருத்துகள்:

காரூரன் சொன்னது…

ஜெயன் அண்ணை,
அனேகமான ஆய்வுக்கட்டுரைகள் வெறும் தூசு தட்டப் படுவதாக எண்ணுகின்றேன். எந்த ஆக்கபூர்வமான விளைவுகளையும் தந்து விடாது. சிங்கள இனத்திலும் இடது சாரி எண்ணம் உள்ளவர்கள் என்ற முனைப்பை தருமே தவிர வேறொன்றும் இல்லை. உங்கள் பாடுகள் எப்படி? திருவான்மியூரிலிருந்து எப்போது ஊருக்கு போனீர்கள்.

BOOPATHY சொன்னது…

//அரசியல் சார்ந்த முக்கியமான அறிவிப்புக்களை இராணுவத் தளபதி வெளியிடுவது அவர் தாம் இராணுவத்தைச் சேர்ந்தவர் என்பதை மறந்ததினால் அல்ல: மாறாக தாம் இராணுவத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் இதனைச் செய்கிறார் //
ஓர் சிங்களவராக இருந்துகொண்டும் இப்படிப்பட்ட ஓர் கருத்தை கூறியதற்காக பாரட்டவேண்டும். அருமையான மொழிபெயர்ப்பு.